இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்கிற ஏழைகளின் எண்ணிக்கை குறைந்து இருப்பதாகவும், கிராமங்களில் தினமும் ரூ.27.20 செலவிலும், நகர்ப்புறங்களில் ரூ.33.33 செலவிலும் ஒருவர் வாழமுடியும் என்றால் அவர் ஏழை அல்ல என்று மத்திய திட்டக்கமிஷன் கூறி உள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.
திட்டக்கமிஷனின் இந்த மதிப்பீடு கேலிக்கூத்தானது என்று கூறியுள்ள டெல்லி பாரதீய ஜனதா தலைவர் விஜய் கோயல், டெல்லி போன்ற நகரங்களில் ஒரு நாளைக்கு 33 ரூபாயில் வாழ்க்கை நடத்த முடியுமா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும், 33 ரூபாயை வைத்துக்கொண்டு ஒரு நாள் வாழ்ந்து பாருங்கள் என்று கூறி, பிரதமர் மன்மோகன் சிங், ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, திட்டக்கமிஷன் துணைத்தலைவர் மாண்டெக் சிங் அலுவாலியா, டெல்லி முதல்–மந்திரி ஷீலா தீட்சித் ஆகியோருக்கு தலா 33 ரூபாய் மணி ஆர்டர் அனுப்பி இருப்பதாக, அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளார்.