Thursday, December 12, 2013

தினமணி-புதுடில்லி -12-12-2013...

தனியார்மயக் கொள்கையால் நாட்டுக்கு ஆபத்து: குருதாஸ்தாஸ் குப்தா எம்.பி. எச்சரிக்கை

First Published : 12 December 2013 04:38 AM IST
தனியார்மயம், தாராளமயக் கொள்கைகளால் நாட்டுக்கு ஆபத்து ஏற்படும் என்று முதுபெரும் தொழிற்சங்கத் தலைவரும், மக்களவை உறுப்பினருமான குருதாஸ் தாஸ்குப்தா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசுப் பொதுத் துறை வங்கிகளைத் தனியார்மயாக்கும் அரசின் கொள்கைகளுக்கு எதிராக, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் நாடாளுமன்றச் சாலையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசுகையில் குருதாஸ் தாஸ் குப்தா கூறியது:
பொதுத் துறை வங்கிகளைத் தனியார்மயமாக்கும் அரசின் கொள்கைகளுக்கு எதிராக நடைபெறும் போராட்டம், வங்கிகளைக் காக்கும் தேசியப் போராட்டமாகும். வங்கித் துறையைத் தனியார்மயமாக்குவதால் பல்வேறு சிக்கல்களை நாடு சந்திக்கும். தனியார் வங்கிகள் பெரும்பாலும் பெரும் பணக்கார்களுக்கு மட்டுமே கடன் வழங்கி வருகின்றன. தனியார் வங்கிகளில் சங்கம் அமைக்கும் உரிமை மறுக்கப்படுகிறது. மேலும், குறைந்த ஊதியம், இட ஒதுக்கீடு அமல்படுத்தாதது, ஊழியர்கள் இடமாற்றம் உள்ளிட்ட ஏராளமான பிரச்னைகள் உள்ளன.
ஆனால், ஏழைகளுக்கும், நடுத்தர மக்களுக்கும் அரசு பொதுத் துறை வங்கிகள் மட்டுமே கடன் வழங்கி வருகின்றன. இந் நிலையில், பொதுத் துறை வங்கிகளின் நலனைப் பாதுகாக்காமல், இந்தியாவில் வெளிநாட்டு வங்கிகளின் கிளைகளை அமைக்கவும், பெரு முதலாளிகள் வங்கிகளைத் தொடங்கவும் அரசு முனைப்புக் காட்டி வருகிறது. வங்கிகள் தனியார்மயமாவதால் ஊழியர்களின் நலன்கள் பாதிக்கப்படும். பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடைந்து வருவது குறித்து அரசுக்குக் கவலையில்லை என்றார் குருதாஸ்தாஸ் குப்தா.
தொடர்ந்து போராடுவோம்: அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எஸ் வெங்கடாசலம் பேசியது:
"தனியார்மயம், தாராளமயம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே மத்திய அரசின் கொள்கைகள் அமைந்துள்ளன. வங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ள பணம் மக்களுடையதே அன்றி, இந் நாட்டின் பிரதமருக்கோ, நிதியமைச்சருக்கோ சொந்தமில்லை. பொதுத் துறை வங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ள பணம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் கடன்கள் மூலம் கொள்ளையடிக்கப்படுகிறது. இத்தகைய பொதுத் துறை வங்கிகளின் தனியார்மயத்தை ரிசர்வ் வங்கியும் ஊக்குவித்து வருகிறது. பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன் கடந்த 5 ஆண்டுகளில் பன்மடங்கு அதிகரித்துள்ளது. பொதுத் துறை வங்கிகளில் கடன் நிலுவை வைத்திருக்கும் பெரு நிறுவனங்கள், பெரு முதலாளிகள் ஆகியோரின் பட்டியலை அரசு வெளியிடத் தயாராக இல்லை. இதுபோன்ற சூழலில் பொதுத் துறை வங்கிகளைக் காக்கவும், வங்கிகளின் பணிபுரியும் ஒப்பந்தத் ஊழியர்களை நிரந்தமாக்கக் கோரியும் தொடர்ந்து போராடுவோம்' என்றார் அவர். 
மத்திய அரசுக்குக் கோரிக்கை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி. ராஜா எம்.பி. பேசுகையில், "பொதுத் துறை வங்கிகள் தனியார்மயத்துக்கு எதிராக இடதுசாரிக் கட்சிகள் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும். வங்கி ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும்' என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பாசுதேவ் ஆச்சார்யா, தபன் சென் எம்.பி. உள்ளிட்ட ஏராளமான தொழிற்சங்கத் தலைவர்கள், வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.